மூடு

மாவட்டம் பற்றி

கடலூர் மாவட்டத்தின் முக்கியமான அம்சங்கள் :

1. புவியியல் அமைப்பு

கடலூர் மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் முக்கியமான மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மாநிலத்தின் கிழக்கு கடற்கரை பகுதியை ஒட்டி அமைந்துள்ளது, கடலூர் மாவட்டத்தின் அரண்களாக விழுப்புரம் நாகப்பட்டினம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் உள்ளன. கிழக்கு திசையில் வங்காள விரிகுடா கடல் அரணாக உள்ளது. இவ்வூரின் அமைவிடம்; அட்சரேகை 150 511 / 110 1111 மற்றும் 120 3511N, தீர்க்க ரேகை 780 3811 to 800 0011 மற்றும் கடல் மட்டத்திலிருந்து 4.6m உயரத்தில் அமைந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தின் விஸ்தீரணம் மொத்தம் 3678 சதுர கிலோ மீட்டர் ஆகும், இதில் வடக்கில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் வரை 68 கீலோ மீட்டருக்கு கடற்கரை பகுதி உள்ளது. தெற்கு பகுதியில் கொள்ளிடம் நதி வரை பரவியுள்ளது, ஆறு கிலோமீட்டருக்கு கடற்கரை சமவெளிப்பகுதியுள்ளது, வடக்கு கடற்கரை பகுதியில் மணல் குன்றுகள் மற்றும் சதுப்புநிலங்கள் உள்ளன, இம்மாவட்டத்தில் உள்ள கடற்கரை நகரங்களில் பரங்கிப்பேட்டை அதிகமான மீன் பிடி தொழில் நடக்கும் இடமாகவும், மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதியாக உள்ளது, தமிழ்நாட்டிலேயே பழுப்பு நிலக்கரி கிடைக்கும் மாவட்டமாக கடலூர் உள்ளது, இம்மாவட்டத்தில் முதல் நூற்றாண்டில் குடியேறியவர்களின் தொடர்புகள் உள்ளன, கடலூர் மாவட்டம் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களுக்கு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு மற்றும் கொள்ளிடம் போன்ற ஆறுகள் கடலூர் மாவட்டத்தை செழுமையடையச் செய்கின்றன. இவ்வாறுகள் மழைக்காலங்களில் வெள்ளத்தால் நிரம்பியும் கோடைக்காலத்தில் மணலால் நிரம்பியும் காணப்படுகின்றன.

2. மக்கள் தொகை

2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கடலூரில் ஆண்கள் மற்றும் பெண்கள் முறையே 1,311,697 மற்றும் 1,294,217 பேர் வசித்து வந்தனர். இதில் கடலூர் இந்திய அளவில் உள்ள 640 மாவட்டங்களில் 158-வது இடத்தை பெற்றுள்ளது, சராசரியாக ஒரு சதுர கிலோமீட்டருக்கு 707 பேர் மக்கள் அடர்த்தி உள்ளது, 1000 ஆண்களுக்கு 988 பெண்கள் பாலின விகிதம் இம்மாவட்டத்தில் உள்ளது, இம்மாவட்டத்தில் எழுத்தறிவு 88.04 சதவிதம். 2001-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி கடலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 22,85,395 இதில் ஆண்கள் 11,50,908 பெண்கள் 11,34,487. 2001 முதல் 2011 வரையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 14 சதவிதமாகும். மாநில வளர்ச்சி விகிதம் 15.6 சதவிதத்துடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவாகவே உள்ளது, 2001-ன் கணக்கெடுப்பின் படி 0-6 வயது குழந்தைகள் 2.84 மில்லியனாகவும் 2011 கணக்கெடுப்பின்படி 2.80 இலட்சங்களாகவும் உள்ளன. மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகை 6.34 இலட்சத்திலிருந்து 7.64 ஆக உயர்ந்துள்ளது இது இம்மாவட்டத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் மிகவும் அதிகமாக உள்ளதை குறிக்கின்றது.

3. வரலாறு

இம்மாவட்டம் முன்னர் ஆற்காடு மாவட்டமாக இருந்து பின்னர் வடஆற்காடு மற்றும் தென்னாற்காடு என்று பிரிந்தது. ஆற்காடு என்று பெயர் வருவதற்கு என்ன காரணம்?
ஆறுகாடுகள் என்பது மருவி ஆற்காடு என்ற பெயர் வந்தது. இது ஆறுமுனிவர்களின் வசிப்பிடமாகவும் இருந்துள்ளது, முதுமைநாட்களில் இந்நகர் தொண்டை நாடு எனவும் அழைக்கப்பட்டுள்ளது. தொண்டை நாடு “சான்றோர்” உடைத்து என்ற பெயருக்கு ஏற்ப சிறப்பு மிக்க பெரியோர்கள் இம்மாவட்டத்தில் வாழ்ந்துள்ளனர். கடந்த வரலாற்றில் சோழர்கள் ஆட்சியின் போது கடலூர் பெருமைமிகு இடத்தை பிடித்துள்ளது என்பதை இது காட்டுகின்றது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோமானிய பேரரசுடன் கடலூர் மாநகரம் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது பல ஆராய்ச்சியின் வாயிலாக தெரிகின்றது. சோழர்கள் மட்டுமல்லாது, பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களின் தடயங்கள் கடலூரில் உள்ளன, பண்டைய வணிக உறவுகளில் கடலூர் இடம் பெற்றதற்கான தொல்பொருள் சான்றுகள் மஞ்சக்குப்பதில் உள்ள கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் காணப்படுகின்றன. இம்மாவட்டத்தில் இராமலிங்க அடிகளாரின் இருப்பிடமான வடலூர், அப்பர் அடிகளார் மற்றும் இராகவேந்திர சுவாமிகள் ஆகியோர் வசித்த இடமாக கடலூர் உள்ளது, பிரபலமான நடராஜர் சிவன் கோவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் உள்ளது, கடலூர் மாவட்டத்தை முதலில் டச் நாட்டைச் சேர்ந்தவர்களும், அவர்களை பின் தொடர்ந்து போர்ச்சுக்கல் பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் நாட்டினர் ஆண்டு வந்தனர் செயின் டேவிட் கோட்டைக்காக தேவனாம்பட்டிணத்திற்கு அருகில் செஞ்சியை ஆண்டவர்களுக்கும் பிரிட்டிஷ் வீரர்களுக்கும் போர் நடைபெற்றது, 1674 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் முழுமையாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் வந்தது. ஆங்கிலேயர்கள் கடலூரை 1748 முதல் 1752 வரை தலைநகரமாக கொண்டிருந்தனர்.

4. மாவட்ட தலைநகர் கடலூர்

கடலூர் ஒரு வளர்ந்து வரும் மாவட்டமாகும் இது கெடிலம் மற்றும் பெண்ணையாறு இரண்டு ஆறுகளும் கடக்கும் வங்காள விரிகுடாவில் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. கடலூரிலிருந்து சென்னை 200 கிலோமீட்டர் தூரத்திலும் புதுச்சேரி 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, 1866-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் வருவாய் கிராமத்தில் இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட்டது, 9.05.1993 அன்று தரம் உயர்த்தப்பட்ட நகராட்சியாக கடலூர் அறிவிக்கப்பட்டது இந்த நகரத்தின் பரப்பளவு 27.69 சதுர கிலோமீட்டர் ஆகும். கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புது நகர் என இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கப்பட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலப்பதால் இது கடலூர் என்று அழைக்கப்பட்டது, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்தே இவ்வாறு அழைக்கப்பட்டது. கெடிலம் மற்றும் பரவனாறு சேருமிடத்தில் கடலூர் துறைமுகம் உள்ளது, 1865 ஆம் ஆண்டு கேப்பர்மலையில் உள்ள மத்திய சிறைச்சாலை உருவாக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க தலைவர்களும் சுதந்திர போராட்ட வீரர்களும் குறிப்பாக சுப்பரமணிய பாரதியார் இம்மத்திய சிறையில் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5. மண் வளம்

கடலூர் மாவட்டத்தின் மண் வகைகளாக கருப்பு மண், சிவப்பு மண், இரும்பு தாது மண், வண்டல்மண் மற்றும் களிமண் ஆகியவை உள்ளன கருப்பு நிற மணல்கள் உள்ள வட்டங்களாக சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் உள்ளதன, கடலூர் மற்றும் சிதம்பரத்தின் கடற்கரை பகுதிகளில் மணல் பாங்கான பகுதியில் ஆற்றுப்படுக்கைகளுக்கு இடையே வண்டல்மண் மிகுந்து காணப்படுகிறது.

6. வானிலை மற்றும் மழையளவு

கடலூர் மாவட்டம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையால் பயனடைகிறது, மழைக்காலங்களில் வடகிழக்கு மழையால் இயற்கை சூழல் மாறி வங்காள விரிகுடாவில் ஏற்படும் இடர்பாடுகள் புயலாக உருவாகி தொடர்ச்சியான மழை பெய்கிறது, பொதுவாக இந்த பகுதியில் வருடத்திற்கு 1086.4 மில்லிமீட்டர் அளவு மழை பொழிவு இருக்கும் வருடத்தின் சராசரி மழையளவு 1050 மில்லிமீட்டர் முதல் 1400 மில்லிமீட்டர் ஆகும். இதில் குறைந்த அளவாக விருத்தாச்சலத்தில் 1051 மில்லிமீட்டரும், அதிகபட்ச அளவாக சிதம்பரத்தில் 1402 மில்லிமீட்டரும், பரங்கிபேட்டையில் 1347 மில்லிமீட்டர் ஆகவும் பதிவாகிறது. கடலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஈரப்பதம் 60 முதல் 83 சதவீதம் ஆகும், அதிகபட்ச ஈரப்பதம் வடகிழக்கு பருவமழைக்காலத்தில் அனுசரிக்கப்படுகிறது (அக்டோபர் முதல் டிசம்பர்). எப்பொழுதும் காற்றின் வேகம் மே மாதத்தில் அதிக பட்சமாகவும் நவம்பர் மாதத்தில் குறைவாகவும் மற்ற மாதங்களில் மிதமானதாகவும் இருக்கும். கோடைக்காலங்களில் மார்ச் முதல் மே வரை மிகவும் சூடான வெப்பமண்டல சூழலே நிலவுகின்றது, தென்மேற்கு பருவமழை ஜீலை முதல் செப்டம்பர் வரையிலும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் பொழிகின்றது, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் குளிர்காலங்களாகும். கடலூர் மாவட்டத்தின் அதிகபட்ச வெப்பநிலை ஜீன் 40.3C குறைந்த பட்ச வெப்பநிலை ஜனவரி 20.4C ஆகும்.

7. மாவட்ட நிர்வாகம்

கடலூர் மாவட்டத்தில் 883 வருவாய் கிராமங்கள் உள்ளன இவை மூன்று வருவாய் கோட்டங்ளாக பிரிக்கப்பட்டுள்ளதன, அவை கடலூர், சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம். வருவாய் நிர்வாக வட்டங்களாக கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாச்சலம், வேப்பூர் மற்றும் திட்டக்குடி ஆகியவை உள்ளன. 683 கிராம ஊராட்சிகளும், 14 ஊராட்சி ஒன்றியங்கள் முறையே கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கீரப்பாளையம், மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், குமராட்சி, விருத்தாச்சலம், நல்லூர், கம்மாபுரம் மற்றும் மங்களுர். ஐந்து நகராட்சிகளாக கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் ஆகியவை உள்ளன. கடலூரில் 16 பேரூராட்சிகளும், ஒரு டவுன்ஷிப் நெய்வேலியும் உள்ளது.

8. பாசன முறைகள்

கடலூர் மாவட்டம் காவிரி டெல்டாவின் கடை மடை பகுதியில் உள்ளது, மாவட்டத்தின் பகுதிகள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைக் கொண்டுவரும் கால்வாய்கள் மூலம் நீர் பாசன வசதி பெறுகிறது, நெய்வேலி சுரங்கங்களில் இருந்து கிடைக்கும் நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவுகிறது 60 சதவீதம் பயிர் நிலங்கள் மழையை மட்டுமே சார்ந்துள்ளன, எஞ்சியுள்ளவை நிலத்தடி நீரையே சார்ந்துள்ளன, கடலூரில் 592 நீர்தேக்க சிற்றணைகளும், 270 கால்வாய்களும் ஒரு பெரிய நீர் தேக்கமும் பாசனத்திற்கான பிரதான ஆதாரமாக விளங்குகின்றன. திட்டக்குடியில் உள்ள வெல்லிங்டன் நீர்தேக்கமும், காட்டுமன்னார்கோயிலில் உள்ள வீராணம் நீர் தேக்கமும் பாசன ஆதாரமாக உள்ளது, கடலூர் தாலுக்காவில் உள்ள பெருமாள் ஏரி பெரிய நீர்பாசனம் மூலமாகவும் உள்ளது. ஆறுகளில் மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஓட்டம் உள்ளது, குறைவான பருவமழைக்காலங்களில் ஆறுகளில் நீர் ஓட்டம் பாதித்து விவசாயிகளின் பாசனத்தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான மாற்று மூலத்தை வீராணம் மற்றும் பெருமாள் ஏரி மூலமாக அடையப்படுகிறது.

9. வேளான்மை

கடலூர் மாவட்டத்தில் 80 சதவீதம் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமான துறையாக வேளான்மை உள்ளது, இது கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகப்படுகின்றது, இந்த மாவட்டத்தின் மொத்த நிலபரப்பில் சுமார் 75 சதவீதம் விவசாய பயன்பாட்டிலே தான் உள்ளது. அவற்றில் 60 சதவீதம் பாசன முறையை நம்பியும், 40 சதவீதம் மழையை நம்பியும் உள்ளது. பணப்பயிராக அறியப்படும் முந்திரி இம்மாவட்டத்தில் வடலூர், நெய்வேலி, பண்ருட்டி மற்றும் விருத்தாச்சலம் ஆகிய பகுதிகளில் 60 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகின்றது மற்றும் நெல், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், துவரம்பருப்பு, எள், பாசிப்பயிறு, உளுந்து, முந்திரி ஆகியவை பயிரிடப்படுகின்றது. கரும்பு, தேங்காய், நிலக்கடலை மற்றும் வாழை கணிசமான பகுதியில் பயிரிடப்படுகின்றன. பண்ருட்டியில் விளையும் பலா மற்றும் முந்திரி கணிசமான அளவு அன்னிய செலாவாணிகளை ஈட்டித்தருகின்றது. வெண்டக்காய், கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளும் இங்கு விளைவிக்கப்படுகின்றது.

10. வனத்துறை

மாவட்டத்தில் 4116.05 ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி உள்ளது, பாதுகாக்கப்பட்ட காடுகள் 3689.05 ஹெக்டேரும் நிலங்கலாக 427 ஹெக்டேரும் உள்ளன, காடுகள் அதிகமாக உள்ள பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், விருத்தாச்சலம், திட்டக்குடி வருவாய் வட்டங்களில் உள்ளன.

11. மீன்வளம்

கடலூர் மாவட்டத்தில் மீன்வளம் கடல் நீரை ஆதாரமாக கொண்டு மட்டும் அல்ல, நன்னீர் மற்றும் உவர் நீர் ஆதாரங்கங்களையும் நம்பி உள்ளது. இம்மாவட்டத்தில் 57.5 கி.மீ. வரை கடற்கரை பரந்து விரிந்துள்ளது, 27,966 ஹெக்டேர் பரப்பில் நன்னீர் நீர்வள ஆதாரங்கள் மற்றும் மீன் வளர்ப்பு குளங்கள் உள்ளன.

12. கல்வி

கடலூர் மாவட்டத்தில் 1730-ல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் 226 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 219 மேல்நிலைப்பள்ளிகள் இயங்கிவருகின்றன 7 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 1 மருத்துவக் கல்லூரி/பல்மருத்துவக் கல்லூரி, 10 பாலிடெக்னிக் கல்லூரிகள், 15 தொழில் பயிற்சி மையங்கள், 34 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், இதர சிறிய கல்வி நிறுவனங்களுடன் 1 அண்ணாமலை பல்கலைக்கழகமும் மாவட்டத்தின் கல்வி தரத்தை உயர்த்துகின்றன.

13. சுகாதாரம்

மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் காக்கும் வகையில் கடலூர் மக்களுக்கு பொதுசுகாதாரத்துறையின் சார்பில் பல பயனுள்ள நிகழ்வுகள் நடத்தப்படுகின்றது. 9 அரசு பொது மருத்துவ மனைகள் உள்ளன, அதில் 1484 படுக்கைகள் உள்ளன. ஒரு சித்த மருத்துவமனையும், 1 யுனானி மருத்துவமனையும் இம்மாவட்டத்தில் உள்ளன, 80 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 319 துணைசுகாதார மையங்களும் செயல்படுகின்றன. இவை தவிர பல தனியார் மருத்துவ மனைகள் இம்மாவட்டத்தில் இயங்கி வருகின்றன.

14. வருமானம் மற்றும் வருமை

கடலூர் மாவட்டத்தில் 2001 ஆம் ஆண்டில் ரூபாய் 30,864 ஆக இருந்த தனிநபர் வருமானம் 2011-ஆம் ஆண்டில் ரூபாய் 41,840 உயர்ந்துள்ளது, எனினும் தமிழ் நாட்டின் தனி நபர் வருமானமான 48.216-வுடன் ஒப்பிடுகையில் இதுகுறைவானதாகவே உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 615,346 இதில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் 2,27,472 இவை மொத்த குடும்பங்களின் 36.97 சதவீதமாகும் 2001 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளின் கணக்கெடுப்பு தரவுகள் இம்மாவட்டத்தில் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் சதவீதம் உயர்ந்துள்ளது.

15. போக்குவரத்து

தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களை இணைப்பதற்கு கடலூரில் நல்ல இரயில் மற்றும் சாலை போக்குவரத்து வழித்தடங்கள் சிறப்பாக உள்ளன.

      a) சாலை :

தேசிய நெடுஞ்சாலைகள் 194.80 கி.மீ. அளவுக்கு உள்ளது, தேசிய நெடுஞ்சாலை NH45A சாலை கடலூரை விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை இணைக்கிறது. NH45C இந்த தேசிய நெடுஞ்சாலை திருச்சி மாவட்டத்தை கடலூருடன் இணைக்கிறது. கடலூரில் மாநில நெடுஞ்சாலைகள் நகர்புறங்களுடன் சேர்த்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இணைகின்றது. தேசிய நெடுஞ்சாலை மொத்தம் 1899.10கி.மீ. தூரம் வரை உள்ளது.

     b) இரயில் :

கடலூர் மாவட்டத்தில் 27 இரயில் நிலையங்களும் மூன்று இரயில் சந்திப்புகளும் உள்ளன. கடலூர்-விழுப்புரம் – சென்னை மற்றும் கடலூர்-மயிலாடுதுறை-திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை-வேளாங்கண்ணி கடலூர்-விருத்தாச்சலம்-சேலம் வழியாக இரயில்கள் செல்லும் வழித்தடங்கள் ஆகும். இந்த அகல இரயில் பாதையின் நீளம் 188 கி.மீ. தூரம் வரையுள்ளது.

     c) துறைமுகங்கள் :

கடலூர் மாவட்டத்தில் இரண்டு துறைமுகங்கள் உள்ளன. ஒன்று கடலூர் முதுநகரில், மற்றொன்று பரங்கிப்பேட்டை உள்ளது, பரங்கிப்பேட்டை துறைமுகத்தில் எந்த செயல்பாடும் இல்லாதிருப்பதனால் அது பயன்பாட்டில் இல்லை. குறைந்தபட்ச ஏற்றுமதி இறக்குமதி செயல்பாடுகளே மேற்கொள்ளப்படுகிறது. இரும்பு தாது ஏற்றுமதி செய்தும் இராசாயனம் மற்றும் உரங்கள் இரக்குமதி செய்யப்படுகின்றன. 17 ஆம் நூற்றாண்டில் பரங்கிப்பேட்டை துறைமுகமானது போச்சிக்கீசியர், டச்சு மற்றும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது.

16. சுற்றுலாத்தலங்கள்

கடலூர் தேவனாம்பட்டிணத்தில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வெள்ளி கடற்கரை வருடம் முழுவதும் சுற்றுலாபயணிகளை கவரும் விதமாக அமைந்துள்ளது மற்றும் வருடத்திற்கு 3000MW மின்சாரம் உற்பத்தி செய்யும் நெய்வேலி திறன்வாய்ந்த அனல்மின்நிலையம் சிறந்த சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது. பிச்சாவரம் சதுப்புநில அலையாற்றி காடுகள் இரண்டு முக்கியமான கழிமுகங்கள் தெற்கில் கொள்ளிட கரையோரம் வடக்கில் வெள்ளாறு முகத்துவாரத்திற்கு இடையே கழிமுக நீர் பகுதி விளையாட்டு விளையாட ஏற்ற விதமாக உள்ளது. கடலூர் மாவட்டம் கோவில்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மாவட்டமாகும் இங்கு கடலூர் பாடலீஸ்வரர் கோயில், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் (இந்த கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று, ஆழ்வார்களும், ஆச்சாரியார்களும் பாடப்பட்ட திருத்தலம்), திருவந்திபுரம் ஹயகிரிவர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக கோயில் (இது திருமாலின் வராக அவதாரத்தினை சித்தரிக்கும் கோயில்), வடலூர் சத்திய ஞானசபை, குறிஞ்சிப்பாடி சுப்ரமணியசுவாமி கோயில், திருவதிகை வீரட்டனேஸ்வரர் கோயில் போன்றவை தரிசிக்கப்பட வேண்டியவை முக்கியமான கோவில்கள் ஆகும்.

17. மின்சாரம்

கடலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அனல் மின்சாரத்தில் அளவு 19567,34 MU. மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு துறைகளுக்காக. அதாவது விவசாயம், தொழிற்சாலைகள், பொது உபயோகம், உள்நாட்டு மற்றும் வணிகத்திற்கான வணிகத்தேவை இவற்றிற்காக 128,221 MU மின்சாரம் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படுகின்றது. விவசாயத்திற்கு துணைபுரிவதற்காக கிராமபுரத்தில் மின்மயமாக்கள் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.

18. தொழில்

கடலூர் மாவட்டத்தின் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் ஒருகாலத்தில் இருந்துவந்தது, கடலூர் துறைமுக நகரமாக இருந்தபோதிலும் கப்பல் வர்த்தகம் இல்லாத காரணத்தினால் நலிவடைந்துள்ளது. தமிழ்நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்களில் தொழில் துறை பூங்கா சிப்காட் கடலூரில் 1975ல் துவங்கப்பட்டது, இதன் மூலம் பின்தங்கிய பகுதிகளில் சிறிய நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழில்களை மேம்படுத்துதல் நடைபெறுகின்றது. கடலூர் தொழிற்துறை மூலமாக உயிரியல்உரம், மருந்து, ஆயுர்வேதம், கட்டிடம் மற்றும் தொழில்கட்டுமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றது. கைவினைகள் மூலமாக மாவட்ட முழுவதும் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் அலகுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. முந்திரி, கடல் உணவு பொருட்கள், மண்பாண்டங்கள் மற்றும் ஆபரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெல்லிக்குப்பம் மற்றும் பெண்ணடம் பகுதியில் மூன்று தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. சேத்தியாதோப்பு பகுதியில் ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்குகின்றது. இந்த தொழிற்சாலைகள் சர்க்கரையை மட்டுமே உற்பத்தி செய்கின்றன. இ.ஐ.டி.பாரி தொழிற்சாலை நெல்லிக்குப்பத்தில் மிட்டாய் தொழிற்சாலை இயங்குகின்றது, வடலூர் மற்றும் விருத்தாசலத்தில் பீங்கான் தொழிற்சாலைகள் உள்ளன.

19. என்.எல்.சி.பவர் பிளான்ட்

1956-ஆம் ஆண்டு முதல் என்.எல்.சி, இந்தியா நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனமாக இயங்கி வருகிறது. இதன் முக்கிய பயன்பாடு நிலக்கரி வெட்டியெடுத்தல் மற்றும் மின் உற்பத்தியாகும். ஒன்று, ஒன்று.A மற்றம் இரண்டாம் சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கப்படுகின்றது. சிறு தொழில் உற்பத்திக்கான மூலப்பொருளாக நிலக்கரி விற்கப்படுகிறது. 242.27 இலட்சம் MT பழுப்பு நிலக்கரியில் இருந்து 3000 மெகாவாட் அனல்மின்சாரம் பெறப்படுகின்றது, 10 மெகாவாட் மின்சாரம் சூரிய ஒளியில் இருந்து பெறப்படுகிறது. இந்த சுரங்ககளில் இருந்து கிடைக்கப்பெறும் அதிகப்படியான நீர் சென்னைக்குத் தேவையான குடிநீரை வழங்குகிறது இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் அனைத்து தென் மாநிலங்களுக்கும் வழங்கப்படுகின்றது.

20. பேரழிவு பாதிப்பு

இயற்கை சீற்றங்கள் :கடலூர் மாவட்டம் எல்லா காலத்திலும் மிகக் கடுமையாக இயற்கை சீற்றங்களுக்கு உட்படும் மாவட்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டம் பல நூற்றாண்டு காலமாகவே புயல் மற்றும் வெள்ளச் சேதங்களில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. பூகம்பங்களை பொறுத்தவரையில் ஆபத்தான 3வது மண்டலத்தில் இருக்கின்றது. இம்மாவட்டத்தின் இயற்கை சீற்றங்களுக்கு காரண கர்த்தாவாக விளங்குவது இம்மாவட்டம் அமைந்துள்ள புவி அமைப்பும் முக்கிய காரணமாகும். நீண்ட கடற்கரையும் கடுமையான வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை (புயல்), அதன் காரணமாக ஏற்படும் மழை வெள்ள அபாயங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் ஏற்படும் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்காள விரிகுடாவில் கடுமையான வெப்ப மண்டல சூறாவளிகளை தாக்குகின்றன. கடுமையான புயல் மற்றும் அதனால் ஏற்படும் பலத்த மழை காற்று காரணமாக மனித வாழ்க்கையில் பெரிதும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. இம்மாவட்டத்தின் கடலோர மண்டலங்களின் பெரும்பாலான பகுதிகள் சாய்வான மற்றும் பள்ளமான பகுதிகளாக உள்ளதால் கூடுதல் இயற்கை சீற்றங்கள் ஏற்பட காரணமாக அமைகின்றது. இதன் விளைவாக பல்வேறு தீங்குகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றது. வடகிழக்கு பருவமழை காலங்களில் இம்மாவட்டத்தில் பெய்யும் அதிகப்படியான மழை மற்றும் ஆறுகளிலிருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து அதிக சேதத்தை ஏற்படுத்திவருகிறது. மேலும் மோசமான வடிகால் வசதி மற்றும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால் இயல்பைவிட சற்று அதிகம் மழை பெய்யும் பட்சத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டு பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட ஆழி பேரலையில் இம்மாவட்டங்கள் மிகப்பெரிய பேரழிவை சந்தித்துள்ளது. ஆழிப்பேரலையின் போது கடல் அலைகளின் உயரம் 2-3 மீட்டர் முதல் 3-4 மீட்டர் எனவும் 330 மீட்டரிலிருந்து 1680மீட்டர் வரையிலான நிலப்பகுதிகள் சுனாமி பேரலையில் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. சுனாமி பேரலையில் ஏற்பட்ட பேரழிவு கடலோர நிலங்களில் இருந்த இலட்சக்கணக்கான பண மதிப்பிலான பொருளாதார சொத்துக்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பேரழிவுக்கு ஆட்படுத்திவிட்டது. இந்த ஆழிப்பேரலையில் இறந்த பெண்களின் உயிரிழப்பு ஆண்களின் உயிரிழப்பை விட மூன்று மடங்கு அதிகமானது என அதிகார பூர்வமான புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. சுனாமி பேரலை கடலோர மீனவ சமூகத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் வசித்து வந்த வீடுகள், மீன்பிடி படகுகள், உப்பளங்கள் மற்றும் விவசாய நிலங்களை பேரரழிவுக்கு உட்படுத்தி இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்துவிட்டது. இதே போன்று 2011ம் வருடம் தானே என்ற சூறாவளி புயல் காணமாக கடலூர் மற்றும் புதுச்சேரி நகரங்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி 39 பொதுமக்கள் உயிரிழக்க நேரிட்டது. மேலும் 2008ல் ஏற்பட்ட நிஷா மற்றும் 2011ல் ஏற்பட்ட தானே புயல்கள் காரணமாக கடல் அலைகளின் உயரம் 1 முதல் 5 மீட்டர் வரை இருந்ததும் கணக்கிடப்பட்டுள்ளது.