• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

காவல் துறை

காவல் துறை :

கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் பழமை வாய்ந்த  சோழ, பல்லவ மன்னவர்களால் கட்டப்பட்ட புகழ்பெற்ற சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலும், நெய்வேலியில் மத்திய அரசின் பழுப்பு நிலக்கரி சுரங்கமும் அமையப்பெற்றுள்ளது.  கடலுார் காவல்  மாவட்டத்தில் 7 காவல் உட்கோட்டங்கள், 46 காவல் நிலையங்கள், 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 4 போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் 4 மதுவிலக்கு அமல் பிரிவுகள் உள்ளடங்கிய 3,678 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.

கடலுார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் அதிகம் வசிப்பதால்  இவ்விரு சமூகத்தினரிடயே ஏற்படும் பிரச்சனைகள் அதிமுக்கியம் வாய்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகும். இப்பிரச்சனைகளை காவல் துறையும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து பிரச்சனைகளை பேசி தீர்த்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்ததின் பேரில்  சட்டம் ஒழுங்குப்பிரச்சனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் அவ்வப்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் நிலம் கையகப்படுத்தல் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனைகள் எழும்போதும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து பிரச்சனைகளை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் மாவட்டத்தில் 48 முக்கிய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2017-ம் வருடத்தில் பதியப்பட்ட குற்றவழக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுத்ததின்பேரில் 78 சதவிகித வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் 65 சதவிகித வழக்கு சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 2017-ம் வருடத்தில் நடந்த 46  கொலை வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டும்,  29 பாரி குற்றவழக்குகளில் 62 சதவிகித வழக்குகள் அதாவது  18 குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.50,26,500/-  மதிப்புள்ள வழக்குச்சொத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடலுார் மாவட்டத்தில் இடதுசாரி மற்றும் மதம் சார்ந்த  தீவிரவாதம் இல்லை.  நான்கு இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. மேற்படி முகாம்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு  தணிக்கை செய்யப்படுகிறது.

கடலுார் மாவட்டத்தில் ஏற்படும் சாலைவிபத்துகளை குறைப்பதற்காக காவல் துறை சார்பில் கடந்த ஆண்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களை கொண்டு நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சாலை விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.  2017ம் ஆண்டு 6 முக்கிய மோட்டார் வாகனப்பிரிவுகளின் கீழ் 22,670 வாகன அற்ப வழக்குகளும், 82,280 வழக்குகளில் தலைகவசம் மற்றும் இருக்கை வார்  அணியாமல் சென்றவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. சாலை போக்குவரத்து விதிகளை மீறிய 10,149 ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு, அதில் 3,333 உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதன் மூலமாக 2016-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 567-லிருந்து, 2017-ம் ஆண்டு 527-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டத்தின் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தப்படும் அயல் நாட்டு மதுபான வகைகள், எரிசாராயம் மற்றும் புதுச்சேரி சாராயம் ஆகியவைகளை மாவட்டத்தில் 9 இடங்களில் அமைக்கப்பட்ட முக்கிய எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு கடத்தல் நடவாமல் தடுக்கப்படுகிறது. இது குறித்து கடலுhர் மாவட்ட மற்றும் புதுச்சேரியை சேர்ந்த காவல் துறையினர் இணைந்து மாதம்தோறும் எல்லைப்பகுதி ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.  மதுவிலக்கு சம்மந்தப்பட்ட குற்றங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு 2017-ம் ஆண்டு 3,247 வழக்குகள் பதியப்பட்டும், அதில் 37,297 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றங்களில் சம்மந்தப்பட்ட 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன ஏல நடவடிக்கையின் மூலமாக ரூ.19,743/- வசூலிக்கப்பட்டு அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.  மதுவிலக்கு குற்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்ட 18 கள்ளச்சாராய வியாபாரிகள் மீது பிரிவு 14-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அதிக முக்கியத்துவம் கொடுத்து விசாரணை செய்ய குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்கப்படுவதன் முலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்படுத்தபட்டுள்ளன.  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகள் பாரபட்சமின்றி புலன்விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடலுார் மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் அனைவரும் தங்களது பணியினை செவ்வனே செய்து மாவட்டத்தில் குற்றங்கள், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமலும், அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும்  நடந்து கொள்ள உறுதி பூணுகிறோம்.

தொடர்பு விவரம்

தயவுசெய்து இங்கே சொடுக்கவும்.