மூடு

புவிசார் குறியீடு

ஒரு புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அல்லது ஒரு பகுதி, நகரம் அல்லது நாடு போன்றவற்றுடன் தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் பெயர் அல்லது அடையாளம் ஆகும். புவிசார் குறியீடுகளைப் பயன்படுத்துவது என்பது, அந்த குறிப்பிட்ட தயாரிப்பு பாரம்பரிய முறைகளின்படி தயாரிக்கப்படுகிறது, சில குறிப்பிட்ட குணங்களைக் கொண்டுள்ளது அல்லது அதன் புவியியல் தோற்றம் காரணமாக ஒரு குறிப்பிட்ட நற்பெயரைக் கொண்டுள்ளது என்பதற்கான சான்றிதழாகக் கருதப்படலாம். புவிசார் குறியீடானது பொதுவாக பானங்கள், உணவுப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் தொழில்துறை தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

அங்கீகரிக்கப்பட்ட பயனர்களாகப் பதிவு செய்தவர்களைத் தவிர வேறு யாரும் பிரபலமான தயாரிப்புப் பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்பதை புவிசார் குறியீடு உறுதி செய்கிறது. ஒரு பொருளின் பெயரைக் குறிப்பிட்டாலே அந்த குறிப்பிட்ட பகுதியை அடையாளம் காணும் அளவிற்கு உள்ளதாக புவிசார் குறியீடு பெறும் பொருட்கள் இருக்க வேண்டும்.

புவிசார் குறியீடுகளை அங்கீகரிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் அமைப்பு

தொழில்துறை சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான பாரிஸ் மாநாட்டின் கீழ் புவிசார் குறியீடுகள் அறிவுசார் சொத்து உரிமைகளின் (IPRs) ஒரு அங்கமாக உள்ளடக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில், புவிசார் குறியீடானது உலக வர்த்தக அமைப்பின் (WTO’s) அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் (TRIPS) உடன்படிக்கையால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தியாவில், புவிசார் குறியீடுகள் பதிவு என்பது பொருட்களின் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1999 மூலம் நிர்வகிக்கப்படுகிறது, இது செப்டம்பர் 15, 2003 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் முதன் முதலாக டார்ஜிலிங் தேநீரானது 2004-05 ஆம் ஆண்டில் புவிசார் குறியீட்டைப் பெற்றது.

புவிசார் குறியீடுகளின் பயன்கள்

  • தயாரிப்புகளுக்கு சட்டப் பாதுகாப்பு
  • அங்கீகாரம் பெறாத மற்றவர்கள் புவிசார் குறியீடு தயாரிப்புகளை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கிறது
  • இது நுகர்வோர் விரும்பிய பண்புகளின் தரமான தயாரிப்புகளைப் பெற உதவுகிறது மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது
  • தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் அவர்களின் தேவையை அதிகரிப்பதன் மூலம் புவிசார் குறியீடு பொருட்களின் உற்பத்தியாளர்களின் பொருளாதார செழுமையை ஊக்குவிக்கிறது

புவிசார் குறியீடுகளின் முக்கியத்துவம்

புவிசார் குறியீடானது, அடையாளத்தைப் பயன்படுத்த உரிமை உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்துவதையும், மேலும் பொருத்தமான தரநிலைகளுக்கு ஒவ்வாத மூன்றாம் தரப்பினரால் அதன் பயன்பாட்டைத் தடைசெய்வதற்கும் உதவுகிறது. இருப்பினும், ஒரு பாதுகாக்கப்பட்ட புவிசார் குறியீடு என்பது, அந்த குறிப்பிற்கான தரநிலைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதே அணுகுமுறைகளைப் பயன்படுத்தி எவரேனும் ஒரு பொருளை தயாரிப்பதைத் தடைசெய்ய அனுமதிக்காது.

புவிசார் குறியீடு பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற, பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
இங்கே சொடுக்குக

கடலூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற பின்வரும் இரண்டு பொருட்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.

1. பண்ருட்டி பலாப்பழம்

பலாப்பழம்

ஊட்டச்சத்து மிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான பலாப்பழத்துக்கு செம்மண் கொண்ட நிலமான பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பெருமளவிலான நிலப்பரப்பில் பயிரிடப்படுகிறது. பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது பலாப்பழம் தான். அது என்றும் தனி சுவை உடையது. இப்பகுதியில் உள்ள மண் வளம், தட்பவெப்ப நிலை ஆகியவை பலாப்பழம் வளமாகவும், சுவையாகவும் இருப்பதற்கு காரணம் ஆகும். ஆண்டு தோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பலாப்பழ சீசன். இந்த சீசன் காலத்தில் பண்ருட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் களைகட்டும். அதன்படி இந்த சீசன் காலத்தில்தான் பலாப்பழம் அதிகமாக விற்பனையாகும். பலாச்சுளைகள் ஒவ்வொன்றும் சற்றும் தடிப்பாகவும், நீளமாகவும், மிகவும் இனிப்பாகவும் இருப்பது பண்ருட்டி வகையின் சிறப்பு. இங்கு உற்பத்தி செய்யப்படும் பழங்கள் தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை போன்ற பெரிய நகரங்களுக்கும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பிவைக்கப்படுகிறது.

2. பண்ருட்டி முந்திரி

முந்திரிப் பழம்

இந்திய முந்திரி ஏற்றுமதிச் சந்தையில் மிக முக்கியமான பங்கை வகிக்கும் ஊர் பண்ருட்டி. இந்தியா முழுவதும் பயிரிடப்பட்டாலும் பண்ருட்டி முந்திரிக்கென்று தனிச் சுவை உண்டு. இந்தியாவில் 6 வகையான முந்திரிப்பருப்புகள் முக்கியமானதாகக் கருதப்பட்டாலும், அதில் பண்ருட்டி முந்திரியில்தான் அதிகபட்சமாக 100 கிராமுக்கு 23 கிராம் புரோட்டீன் இருக்கிறது. பண்ருட்டியில் ஈரப்பதமும் மிகக்குறைவு என்பதால் கெட்டுப் போகாது. பண்ருட்டி முந்திரி பெரும்பாலும் கடற்கரை மணற்பகுதி, செம்மண், சரளை மண் ஆகியவற்றில்தான் அதிகமாக பயிர் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் முந்திரிக் காடுகள் பயிரிடப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து பல்லாயிரக்கணக்கான மெட்ரிக் டன் முந்திரிகள் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இங்கு உற்பத்தியாகும் முந்திரிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகிறது முந்திரிப் பருப்பு. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பூக்கத் தொடங்கி ஏப்ரல், மே மாதத்தில் அறுவடை முடிந்துவிடும். இந்த முந்திரிப் பருப்புகளை உடைத்துப் பதப்படுத்தி, தரம் பிரித்து ஏற்றுமதி செய்யவும், சார்புத் தொழிலாக முந்திரி எண்ணெய், புண்ணாக்குப் போன்றவற்றைத் தயாரிப்பதற்காகவும் பல நிறுவனங்கள் இங்கு இயங்கிவருகின்றன. இவற்றின் மூலம் இந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 80% மக்கள் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பைப் பெற்றுவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்பகுதிப் பெண்களின் முக்கியமான குடிசைத் தொழிலாகவும் இருப்பது முந்திரிப் பருப்பைப் பதப்படுத்தும் தொழில்தான்.